வகுப்பறை கட்டிடம் இடித்து 3 மாதங்கள் ஆகியும் அகற்றப்படாத அவலம்

மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய வகுப்பறை கட்டிடம் இடித்து 3 மாதங்கள் ஆகியும் கழிவுகள் அகற்றப்படாமல் பாம்புகளின் புகலிடமாக மாறியுள்ளதால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.;

Update: 2023-10-15 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

அரசு மேல்நிலைப்பள்ளி

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் மூங்கில்துறைப்பட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில்மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்குள்ள 2 பள்ளிக்கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் அது சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் அங்கு பாடம் படிக்கும் மாணவர்கள் எப்போது என்னவாகுமோ என்ற அச்சத்துடனேயே பாடம் படித்து வந்தனர்.

மரத்தடியில் வகுப்புகள்

எனவே சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சேதம் அடைந்த ஒரு கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இன்னொரு கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளது. அதன் மேல் செடி, கொடிகள் வளர்ந்து விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிவிட்டது. பழைய கட்டிடங்களில் நடைபெற்று வந்த வகுப்புகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியின் கீழ் நடைபெற்று வருகிறது. மழை பெய்தால் 3-வது கட்டிடத்தில் உள்ள வராண்டாவில் வகுப்புகள் நடைபெறும். இதனால் கடும் சிரமத்துக்குள்ளாகி வரும் மாணவ-மாணவிகள் புதிய கட்டிடம் எப்போது கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருந்து வருகின்றனர்.

விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

ஆனால் பழைய கட்டிடத்தை இடித்து முடித்து சுமார் 3 மாதங்கள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதர்கள் வளா்ந்து காணப்படுவதோடு, பழைய கட்டிடத்தின் இடிபாடுகளும் அகற்றப்படாமல் உள்ளதால் அதில் பாம்புகள், தேள், பூரான் போன்ற விஷஜந்துக்கள் வசித்து வருவதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அச்சப்படுகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க அடுத்து இந்த மாத இறுதியில் பருவமழை தொடங்க உள்ளது. இதனால் மரத்தடியில் பாடம் படித்து வந்த மாணவர்களுக்கு வகுப்புகள் எங்கே நடத்துவது என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், மழைக்காலங்களில் வகுப்புகள் நடைபெறுமா என்ற சந்தேகத்தில் மாணவர்களும் உள்ளனர்.

சுகாதார சீர்கேடு

மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் போதிய பராமரிப்பு இன்றி சுகாதார சீர்கேடு மிகுந்து காணப்படுவதால் மாணவ-மாணவிகள் அவ்வப்போது நோயின் பிடியில் சிக்கி அவதி அடைந்து வருவதாகவும் புகார் எழுகிறது. எனவே மரத்தடியில் பாடம் படித்து வரும் மாணவர்களுக்கு மழைக்காலத்தில் தடையின்றி வகுப்புகள் நடைபெறுவதற்கு மாற்று ஏற்பாடு செய்வதோடு, புதிய கட்டிடம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும், பள்ளிக்கழிப்பறையை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோாிக்கை விடுத்து வருகின்றனர்.

உடனடி நடவடிக்கை

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, பொதுவாக பழைய கட்டிடத்தை இடித்த சில நாட்களிலேயே புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கும். அனால் 3 மாதங்கள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. இதனால் மழைக்காலத்தில் வகுப்புகள் எங்கு வைத்து நடைபெறும் என்ற சந்தேகம் மாணவர்களிடம் உள்ளது. ஆண்டுதோறும் இப்பள்ளியில் மாணவர் சோ்க்கை அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலை தொடரும் பட்சத்தில் மாணவர் சேர்க்கை குறைந்து விடும். எனவே போதிய அடிப்படை வசதிகளுடன் புதிய பள்ளிக்கட்டிடம் கட்டும் பணியை உடனடியாக தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்