பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடைபெற்றது.;
பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் 11, 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் கட்டுரை, பேச்சு, கவிதைப்போட்டிகள் நடத்தி பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-23-ம் ஆண்டுக்கான போட்டிகள் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளை புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் சபீர்பானு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 130-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். கட்டுரை போட்டியில் பொன்னமராவதி, லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர் தேஜன்யா முதலிடமும், பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி நிவேதா 2-வது இடமும், கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவி கரிஷ்மாரோஸ் 3-வது இடமும் பெற்றனர். பேச்சுப்போட்டியில் விராலிமலை விவேகா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி நிரஞ்சனா முதலிடமும், மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மகாலெட்சுமி 2-வது இடமும், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுரேஷ்குமார் 3-வது இடமும் பெற்றனர். கவிதை போட்டியில் விராலிமலை விவேகா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி செந்தமிழ் முதலிடமும், கைக்குறிச்சி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜா 2-வது இடமும், புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி ஜோஷிகா 3-வது இடமும் பெற்றனர். அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட உள்ளது. முன்னதாக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில் வரவேற்றார். முடிவில் தமிழ் வளர்ச்சித்துறை உதவியாளர் சுப்புராமன் நன்றி கூறினார்.