ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்து தர கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்கள் சரஸ்வதி, பழனிவேல்சாமி. உஷா ஆனந்தன், பிரகாஷ் ஆகியோர் ஆம்பூர் ஈ.எஸ்.ஐ. கிளை மேலாளர் தென்னரசுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஆகிய ஒன்றிய பகுதியில் ஏராளமான சிறு மற்றும் பெரிய கம்பெனிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளது. தோல் தொழிற்சாலைகள், ஜூஸ் கம்பெனிகள், அகர்பத்தி தயாரிப்பு, பெரிய துணிக்கடைகள், நகைக் கடைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
குறிப்பாக தோல் மற்றும் தோல் சார்ந்த தொழிற்சாலைகளில் அதிகமாக வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் இங்கு பணிபுரியும் பெண்கள், தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆம்பூர் தாலுகாவை தவிர மற்ற இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தற்போது வரை இந்த ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்களிலும் ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி அனைத்து தொழிலாளர்களையும் ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதியின்கீழ் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.