ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்தி.மு.க. கூட்டணி பிரசாரம் தொடக்கம்;அமைச்சர்கள் முத்துசாமி-கே.என்.நேரு வாக்குசேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-21 21:35 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலை போலவே, இந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க. ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பெரியார் நகர் பகுதியில், தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர். ஈரோடு பெரியார் நகர் வீதியில் வீடு வீடாக சென்று அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து 'கை' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது அமைச்சர்கள், கை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என்று வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு

இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா குறுகிய காலத்திலேயே மக்களுக்கு மிக நெருக்கமானவராகவும், நன் மதிப்பை பெற்றவராகவும் இருந்தார். அதனால் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியினரின் வேண்டுகோளின்படி உடனடியாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பை தொடங்கி உள்ளோம்.

முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தின்றியே இருந்தார். இருப்பினும், கூட்டணி கட்சியினரையும் கலந்து ஆலோசித்து, அதன் பின்னரே இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்தார்.

முதல்-அமைச்சர் பிரசாரம்

இன்று (அதாவது நேற்று) நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பை தொடங்கி உள்ளோம். வரும் நாட்களில் தி.மு.க. அமைச்சர்களும், ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார்கள். முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றவில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுவது நியாயமற்றது. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளோம். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எனும் வாக்குறுதியை முதல் -அமைச்சர் உறுதியாக நிறைவேற்றுவார். கடந்த ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நிதி நிலையை படிப்படியாக நாங்கள் சீராக்கி வருகிறோம். நிதி நிலையை பொறுத்து மக்கள் நலத்திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் முதல் - அமைச்சர் நிறைவேற்றிக்கொண்டு தான் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் வாக்கு சேகரிப்பில், தி.மு.க. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்