ஈரோடு கிழக்கு தொகுதியில் 75 சதவீதம் வாக்குப்பதிவு; அமைதியான முறையில் தேர்தல் நடந்தது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது. மக்கள் சாரைசாரையாக வந்து ஓட்டு போட்டனர். மொத்தம் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Update: 2023-02-27 23:57 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார்.

இடைத்தேர்தல்

இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவும், தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும், அ.தி.மு.க.வின் தென்னரசை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களும் சூறாவளி பிரசாரம் செய்தனர். இதுதவிர தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க. தலைவர்களும் தனித்தனியாக ஆதரவு திரட்டி வந்தனர்.

வாக்குப்பதிவு

கடந்த 25-ந் தேதி மாலை 6 மணிக்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. ஒரு நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. 52 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 238 வாக்குச்சாவடிகளிலும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் ஓட்டு போட அனைத்து முன்னேற்பாடு வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.

சாரைசாரையாக...

தொடக்கம் முதலே வாக்காளர்கள் சாரை சாரையாக வந்து காத்திருந்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. ஒவ்வொரு மையத்திலும் 5 எந்திரங்கள் இருந்ததால், வாக்குப்பதிவு 'பீப்' சத்தம் கேட்க சற்று தாமதமானது. இதனால் வழக்கத்தை விட சற்று அதிகமாக நேரம் ஆனது.

பாதுகாப்பு

தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏற்கனவே வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்ததுடன், பதற்றமான 32 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். வாக்குச்சாவடிகளில் 200 மீட்டர் தூரத்தில் இருந்தே வாகனங்கள் எதுவும் உள்ளே அனுமதிக்காமல் இருந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் வாக்களிக்க காத்து இருந்தனர். மொத்தத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது.

வெயில் தாக்கம்

காலை 8 மணியில் இருந்தே வெயில் அடித்ததால் பலரும் சிரமப்பட்டனர். கருங்கல்பாளையம் வாக்குச்சாவடியில் பகல் 12 மணி அளவில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வரிசையில் காத்திருந்தபோதே லேசான மயக்கம் அடைந்தார். அதைப்பார்த்த வாக்காளர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

சாலை மறியல்

அங்கு வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அனைத்தையும் சரி செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

எந்திரம் கோளாறு

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்டோனிபாலம் அருகே உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு 25 நிமிடங்கள் தாமதமானது. பெரியண்ண வீதியில் உள்ள கலைமகள் பள்ளிக்கூட வாக்குச்சாவடி மையத்தில், முதியவர் ஒருவர் ஓட்டுப்போட்டதை முகவர் ஒருவர் எட்டிப்பார்த்ததாக தெரிகிறது. இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது.

இதே வாக்குச்சாவடி பகுதியில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெளி முகவர்கள் சிலர் 100 மீட்டர் பகுதிக்குள் வந்து வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டதாக தெரிகிறது. இதனால் 2 தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் ஒரே இடத்தில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது கைகலப்பாக மாறி மோதல் உருவாகும் சூழல் வந்தது. அதைப்பார்த்த போலீசாரும், கட்சி பிரமுகர்களும் விரைந்து வந்து சமாதானப்படுத்தினார்கள்.

ஒரே சின்னம்

சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்துக்கு வாக்களித்தாலும் கை சின்னத்துக்கு பதிவாகிறது என்று ஒருவர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த புகாரில் உண்மை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. கருங்கல்பாளையம் கல்லுபிள்ளையார் வீதி வாக்குச்சாவடியில் இளம் பெண் ஒருவருக்கு கையில் மை வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஓட்டு போட்ட பின்னர் அவருக்கு மை வைக்கப்பட்டது.

கடந்த தேர்தலை கடந்து...

கடந்த 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 69.58 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அதாவது மொத்தம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 37 வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், நேற்று 5 மணிக்கே 70.58 சதவீதம் அதாவது கடந்த தேர்தலைவிட சுமார் 8 ஆயிரத்து 500 வாக்குகள் அதிகமாக பதிவாகி இருந்தது.

75 சதவீதம்

அதுமட்டுமின்றி, மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வந்து கொண்டே இருந்தனர். இதனையடுத்து மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஆனால் ராஜாஜிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கூடத்தில் 6 மணிக்கு மேல் ஓட்டு போட சுமார் 500 பேர் காத்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது.

எனவே நேற்று இரவு வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அதிகம் பேர் வாக்களித்ததால் இரவு 7 மணி நிலவரப்படி 82 ஆயிரத்து 21 ஆண்கள், 87 ஆயிரத்து 907 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 945 வாக்குகள் பதிவாயின. இது 74.69 சதவீதமாகும். இரவு வரை ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு முழு விவரம் தெரியவரும். தேர்தல் காரணமாக ஈரோட்டில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள சாலை போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இங்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வாக்களிப்பதற்கு தாமதம் ஏன்?

தேர்தல் அதிகாரி விளக்கம்

தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 74.69 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி இருக்கிறது. ராஜாஜிபுரத்தில் உள்ள 138-வது வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இங்குள்ள வாக்குச்சாவடிகளில் தலா 1,400 வாக்காளர்கள் இருப்பதால் இந்த காலதாமதம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்