ஈரோடு இடைத்தேர்தல்: விதிமீறல் நடைபெறவில்லை என கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது - விஜயகாந்த்

ஈரோடு இடைத்தேர்தலில் எவ்வித விதிமீறலும் நடைபெறவில்லை என கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.;

Update: 2023-02-26 16:54 GMT

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வித விதிமீறலும் நடைபெறவில்லை என தேர்தல் அலுவலர்கள் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில், ஆடு, மாடுகளை அடைத்து வைப்பதுபோல், மக்களை கூடாரங்களில் அடைத்து வைத்தும், கறி விருந்து அளித்தும், பணப்பட்டுவாடா செய்தும், பரிசு பொருட்கள் வழங்கியும், இதுவரை தமிழகம் காணாத வகையில் இந்த தேர்தலில், புதிய ஃபார்முலாவை ஆண்ட கட்சியினரும், ஆளும் கட்சியினரும் அரங்கேற்றியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகுறித்து தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் அம்பலப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தலில் எவ்வித விதிமீறலும் நடைபெறவில்லை என தேர்தல் அலுவலர்கள் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

தேர்தல் நியாயமாக நடப்பது போல், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களும், பறக்கும் படையினரும், துணை ராணுவத்தினரும், நீதியரசர்களும் கண்டும் காணாமல் போல் இருப்பது அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் வாக்காள பெருமக்கள், பணபலம், அதிகார பலம், ஆட்சி பலத்தையும் மீறி, தேர்தலில் ஜனநாயக முறைப்படி நியாயமாக வாக்களித்து மாபெரும் புரட்சியை ஏற்படுத்துவார்கள் என நம்புகிறேன்.

கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவிற்கு முதல் வெற்றியை தந்த ஈரோடு மக்கள், மீண்டும் இந்த தேர்தலில் உண்மையாக உழைத்துள்ள கட்சிக்கு, வெற்றியை தந்து, ஒற்றை விரல் புரட்சி மூலம் மாபெரும் சரித்திர சாதனையை தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்