ஈரோடு: சுற்றுலா வேன் மீது அரசு பஸ் மோதி விபத்து - வாலிபர் பலி

ஈரோடு அருகே சுற்றுலா வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.;

Update: 2022-06-15 12:28 GMT


சென்னையிலிருந்து 14 பேர் கொண்ட நண்பர்கள் ஒரு சுற்றுலா வேனில் வெள்ளியங்கிரி மலைக்கு சுற்றுலா வந்திருந்தனர். பின்னர் கோவையிலிருந்து ஒகேனக்கல் சுற்றுலா செல்ல திட்டமிட்டு பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்

அம்மாபேட்டை அருகே உள்ளகுதிரை கல்மேடு அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி வந்த அரசு பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேனின் பின் பக்கத்தில் மோதியது. இதில் வேனில் வந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை செய்து பின்னர் அங்குள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சென்னை ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்த டில்லி மகன் ராஜேஷ்குமார்(26) என்ற பட்டதாரி வாலிபர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதில் படுகாயமடைந்த சென்னை ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபு, ரூபன்குமார், சந்தோஷ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இது குறித்து அறிந்த அம்மாபேட்டை போலீசார் உயிரிழந்த ராஜேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்