பாம்பன் புதிய தூக்குப்பாலத்திற்கான உபகரணங்கள் வந்தன

பாம்பன் புதிய ரெயில் தூக்குப்பாலத்்துக்கான உபகரணங்கள் கொண்டு வரப்பட்டன.;

Update: 2023-01-10 18:45 GMT

பாம்பன், 

பாம்பன் புதிய ரெயில் தூக்குப்பாலத்்துக்கான உபகரணங்கள் கொண்டு வரப்பட்டன.

தூக்குப்பாலம்

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுபோல் சுமார் 106 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள வடக்கு கடல் பகுதியில் ரூ.430 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாகவே நடைபெற்று வருகின்றது. இந்த பணியானது ரெயில்வே துறையின் ஆர்.வி.என்.எல். நிர்வாகம் மூலம் நடைபெற்று வருகின்றது. அதற்காக கடலுக்குள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு 333 தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. மேலும் மண்டபத்தில் இருந்து கடலுக்குள் கட்டப்பட்டுள்ள தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து அதன் மீது ரெயில்வே தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளும் முழுமையாக முடிவடைந்து விட்டன.

இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் கட்டப்படவுள்ள தூக்குப்பாலத்தின் பணிகளை இந்த மாத இறுதியில் தொடங்க ஆர்.வி.என்.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்காக இரும்பினால் செய்யப்பட்ட பல உபகரணங்கள் மற்றும் பாகங்களும் பாம்பன் பகுதிக்கு கொண்டு வந்து புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வரும் தூண்கள் அருகே தயார் நிலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

இரும்பு கர்டர்கள்

இது பற்றி ஆர்.வி.என்.எல் நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, பாம்பன் கடலுக்குள் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் முக்கிய பணி தூக்குப்பால பணிகள் தான். தூக்குப்பாலம் கட்டிட பணிகளை இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் பாம்பனில் இருந்து தூக்குப்பாலம் வரையிலும் போடப்பட்டுள்ள தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தி அதன் மீது தண்டவாளங்கள் பொருத்தும் பணிகளும் நடைபெறும். மார்ச் மாதத்திற்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக வருகின்ற மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றும், மத்திய அரசின் ரெயில்வே துறை மூலமும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதுவரை 84 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்