சமத்துவ பொங்கல் விழா கொண்டாட வேண்டும்

அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட வேண்டும் என ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.;

Update: 2023-01-12 17:36 GMT

வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் அமுதாஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் மற்றும் தீர்மானங்களை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் வினோத்குமார் வாசித்தார்.

கூட்டத்தில், வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் வர்ணம் பூசாமல் உள்ள 10 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு புதிதாக வர்ணம் பூசுவதற்கு செலவான ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து 500-ஐ ஒன்றிய பொதுநிதியில் இருந்து வழங்க ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன் பேசுகையில், அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். பொங்கல் விழாவின்போது கோலப்போட்டி, பேச்சு, கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி அவற்றை புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என்றார். ஒன்றியக் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்