35-ம் ஆண்டு நினைவு தினம்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியே அஞ்சலி செலுத்தினர்.;

Update:2022-12-25 01:25 IST

எம்.ஜி.ஆர். நினைவுதினம்

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்களால் இரட்டை இலை சின்னம் வடிவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 10 மணியளவில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.சி.அன்பழகன், கே.பாண்டியராஜன், கோகுல இந்திரா, இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தின் நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்ட மேடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதுடன், 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

40 தொகுதியிலும் வெற்றி

உறுதிமொழியின் போது கோஷம் எழுப்பப்பட்ட முக்கிய கருத்துகள் வருமாறு:-

குடும்ப அரசியலின், மொத்த வடிவம் தி.மு.க. அந்த தி.மு.க-வை, வேரோடும் வேரடி மண்ணோடும், வீழ்த்திக்காட்டுவோம். எம்.ஜி.ஆர். காட்டிய பாதையில், ஜெயலலிதாவின் வழிநடந்து நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி கொள்வோம்.

குடும்ப அரசியல் நடத்தியே, மகனுக்கு மகுடம் சூட்டி, கொடி பிடிக்கும் தொண்டனை, துச்சமென நினைப்பது தான், தி.மு.க.வின் வாடிக்கை, தி.மு.க.வின் வேடிக்கை. மக்களுக்கு எடுத்துச்சொல்லி, ஸ்டாலின் அரசின், பொய் முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவோம்! மக்கள் விரோத, விடியா ஆட்சியை எம்.ஜி.ஆர். வழியிலே, வீட்டுக்கு அனுப்புவோம் வீட்டுக்கு அனுப்புவோம்.

மேற்கூறிய கருத்துகள் உள்பட பல்வேறு கருத்துகளை அ.தி.மு.க. தொண்டர்கள் கோஷமாக எழுப்பினர்.

ஓ.பன்னீர்செல்வம்

இதேபோன்று நேற்று காலை 11 மணியளவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., புகழேந்தி, ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் பி.எஸ்.சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து 2 நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

துரோகியை வீழ்த்திடுவோம்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கோஷம் எழுப்பப்பட்ட முக்கிய சாராம்சங்கள் வருமாறு:-

அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை துண்டாக்க நினைக்கும் சர்வாதிகார கூட்டத்தை தொண்டர்களின் ஒத்துழைப்போடு ஒழித்திடுவோம். எம்.ஜி.ஆரால் வகுக்கப்பட்ட விதியான தொண்டர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்டவிதியை பொதுக்குழுவின் மூலம் மாற்றி அதன் மூலம் அ.தி.மு.க. எனும் இயக்கத்தை அராஜகத்தின் மூலம் குறுக்குவழியில் அபகரிக்க நினைக்கும் துரோகியை வீழ்த்திடுவோம் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் கோஷங்களாக எழுப்பப்பட்டன.

டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மதியம் 1 மணியளவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சசிகலா

மதியம் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அவர்கள் உறுதிமொழி ஏற்பின்போது, ''கோடான கோடி கட்சித்தொண்டர்களின் எண்ணம் ஈடேற அனைவரும் ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்'' என்று உறுதிமொழி ஏற்றனர்.

ஏ.சி.சண்முகம்

புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி நேற்று அதிகாலையிலேயே எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதேபோன்று, ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க. அலுவலகம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு தனியாக வந்த சி.வி.சண்முகம்

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், அதன் பிறகு தாமதமாக எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு வந்து தனியாக அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதாவது, அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசிய சி.வி.சண்முகம், வருகின்ற தேர்தலில் பா.ஜ.க., தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்தார். இதனால், அ.தி.மு.க. தலைமை அவரை எச்சரித்ததன் காரணமாக அவர் தனியாக வந்து மலர் அஞ்சலி செலுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்