உண்ணாவிரதத்தில் ஈபிஎஸ்...சட்டசபையில் ஓபிஎஸ்...!
தமிழ்நாடு சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரின் 3-வது நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.;
சென்னை,
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள், தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டன. நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மழைக்கால கூட்டத்தொடர் 3-வது நாள் கூட்டம் சட்டசபையில் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகிய 4 பேரும் பங்கேற்றுள்ளனர். சட்டசபையில் தற்போது உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கீட்டில் சட்டசபை விதிகளை கூறி சபாநாயகர் அங்கீகரிக்க மறுத்ததால் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு போலீார் அனுமதி மறுத்த நிலையிலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருவதும், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சட்டசபை நிகழ்வில் பங்கேற்று வருவதும் அரசில் விமர்சகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.