'தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடம் கூறினோம்' - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

அதிமுகவை ஒன்றிணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அப்போது தான் நாம் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.;

Update: 2023-02-03 07:31 GMT

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தையும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தனித்தனியே சந்தித்தனர்.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஐ தனித்தனியே சந்தித்த பின் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மேலிடப்பொறுப்பாளர் சிடி ரவி செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்களிடம் சிடி ரவி கூறியதாவது:-

1972-ல் அதிமுக உருவானபோது எம்.ஜி.ஆர். திமுகவை தீய சக்தி என்று அழைத்தார். அவரது கருத்து 2023-ம் ஆண்டும் மாறவில்லை.

தான் உயிருடன் இருந்தவரை 'அம்மாவும்' திமுகவை தீயசக்தி என்று அழைத்தார். மக்களிடம் முக ஸ்டாலின் அரசின் பிரபலம் குறைந்துவரும் சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை மிகப்பெரிய அளவில் உள்ளது.

திமுக ஒரு குடும்பத்திற்காக உழைத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி திமுக.

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, திமுக மந்திரிகள், எம்.பி.க்களால், மூத்த தலைவர்களால் தமிழ் கலாசாரம் மீது தொடர் தாக்குதல் நடைபெறுகிறது.

கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு திமுகவுக்கு எதிராக தமிழ் மக்கள் உள்ளனர் என்பதை காட்டுகிறது.

இடைத்தேர்தல் எப்படி நடக்கும் என்று நாம் அனைவருக்கும் தெரியும் குறிப்பாக திமுக எவ்வாறு பண பலத்தை பயன்படுத்தும், அரசு எந்திரத்தை பயன்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் அதை ஈரோடில் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆகையால் தான் இந்த தீய சக்தியை இடைத்தேர்தலில் தோற்கடிக்க ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, ஒன்றுபட்ட அதிமுக கட்டாயம் தேவை.

இன்று காலை எடப்பாடி பழனிசாமி , ஓ. பன்னீர் செல்வத்தை நாங்கள் சந்தித்து ஈரோடு இடைத்தேர்தல், தமிழ்நாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தோம்.

எங்கள் தேசியபொதுச்செயலாளர் ஜேபி நட்டா சார்பாக சில தகவல்களை நான் இருவரிடமும் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) எடுத்துக்கூறினேன். நான் அவர்களிடம் தனித்தனியே என்ன கூறினேன் என்று இப்போதைக்கு உங்களிடம் கூற முடியாது.

தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு திமுக கூட்டணி வேட்பாளரை வீழ்த்துங்கள் என்று ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இருவரிடமும் கூறினோம்.

அதிமுகவை ஒன்றிணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அப்போது தான் நாம் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும்.

அதிமுகவை ஒன்றிணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். வேட்புமனு தாக்கலுக்கான கடைசிநாள் 7-ம் தேதி. நான் நம்புகிறேன். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிக்க வரும் 7ம் தேதி வரை அவகாசம் உள்ளது.

அதிமுகவை ஒன்றிணைக்கும் உங்கள் முயற்சிக்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஒப்புக்கொண்டனரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சிடி ரவி, 'அனைத்து தகவலையும் இங்கு கூறமுடியாது' என்றார்.

இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு பாஜக மேலிட பொறுப்பாளர் டிசி ரவி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு எதிராக உள்ளனர். திமுக மீது கோபமாக உள்ளனர். இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். திமுகாவுக்கு எதிராகவும், தீய சக்திக்கு எதிராகவும் நாங்கள் உள்ளோம்' என்றார்.

இதன் மூலம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தனது முடிவை வரும் 7-ம் தேதி அறிவிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்