3-ம் வகுப்புக்கே நுழைவு தேர்வை திணிக்கிறாங்க - அமைச்சர் பொன்முடி அதிரடி குற்றச்சாட்டு

புதிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் நுழைவுத்தேர்வை திணிக்கப் பார்க்கின்றனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.;

Update:2022-09-12 15:56 IST

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் "நான் முதல்வன்" திட்டத்தின் மண்டல மாநாட்டை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது,

நான் முதல்வன் திட்டத்தின் பாடத்திட்டம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், பாடத்திட்டத்தை முழுமையாக மாணவர்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பு கல்லூரி முதல்வர்களுக்கு உள்ளது. நான் முதல்வன் திட்டம் பற்றி கல்லூரி முதல்வர்கள் முழுமையாக தெரிந்து கொண்டால் தான், அவர்களால் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க முடியும்; அதற்காகவே மண்டல மாநாடு நடத்தப்படுகிறது.

முந்தைய காலத்தில் பொறியியல் படிப்பில் சேர கடும் போட்டி இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் காலியிடங்கள் நிறைய உள்ளது. காலம் மாறிக்கொண்டிருப்பதால், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கலை அறிவியல் கல்லூரி பாடத்திட்டங்கள் மாற்றப்படும். தொழிலாளர் ஆக இல்லாமல் தொழில் முனைவோராக மாணவர்களை உருவாக்குவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமாகும். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை தருபவர்களாக மாற வேண்டும்.

என்ஜினீயரிங் படித்து முடிப்பவர்கள், அவரவர் பகுதிகளில் சிறு, குறு தொழில்களைத் தொடங்க வேண்டும். அதற்காக என்ஜினீயரிங் படிப்புடன் கூடுதல் படிப்புகளை கற்பித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்துடன் பயிற்சியும் மாணவர்களுக்கு தேவை.

நான் முதல்வன் திட்டம் வெற்றியடைய வேண்டும். திட்டத்தை வெற்றி பெற வைப்பது கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களின் கைகளில் தான் இருக்கிறது. பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை கருணாநிதி ரத்து செய்ததால், இன்று அதிகமானோர் பொறியியல் படித்து வருகின்றனர்.

புதிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் இன்று பலவற்றிலும் நுழைவுத்தேர்வை திணிக்கப் பார்க்கின்றனர். 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த முயற்சி செய்கின்றனர். அது தேவையில்லை என்ற உணர்வோடு தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை முதல்-அமைச்சர் உருவாக்கி உள்ளார்.

அதில் ஒரு திட்டம்தான் 'நான் முதல்வன்' திட்டம். சுகாதாரம் மற்றும் கல்வித்துறை முதல்-அமைச்சரின் இரு கண்களாக பார்க்கிறார். உயர்கல்வியின் பொற்காலமாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை மாற்ற வேண்டிய பொறுப்பு கல்லூரி முதல்வர்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்