நெல்லை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நெல்லைக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2023-10-26 20:39 GMT

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) நெல்லையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு அவர் விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் நெல்லைக்கு வருகை தந்தார்.

நெல்லை மாவட்டத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சங்கர்நகர் பண்டாரகுளம் பகுதியில் தி.மு.க. சார்பில், செண்டை மேளம், தாரை தப்பட்டை, அதிர்வேட்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

இதில் ஞானதிரவியம் எம்.பி, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் வந்தனர்.

பின்னர் உதயநிதி ஸ்டாலின் சங்க நகரில் உள்ள இந்தியா சிமெண்டு விருந்தினர் மாளிகையில் தங்கினார். அங்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்