ரூ.1 கோடியில் நவீன பொழுதுபோக்கு மையம்
தஞ்சை ராஜப்பா பூங்கா, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன பொழுதுபோக்கு மையத்தை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர், மே.28-
தஞ்சை ராஜப்பா பூங்கா, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன பொழுதுபோக்கு மையத்தை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
ராஜப்பா பூங்கா
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராஜப்பா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மணிக்கூண்டு உள்ளது. இதனை ராணிஸ் டவர் என்றும் அழைப்பது உண்டு. இந்த மணிக்கூண்டு 1883-ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா 3 ஆயிரத்து 284 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ளது. மணிக்கூண்டு 130 அடி உயரம் கொண்டது. கட்டிடம் முழுவதும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது.இந்த மணிக்கூண்டு மற்றும் ராஜப்பா பூங்கா ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ராஜப்பா பூங்கா மற்றும் மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
நவீன பொழுதுபோக்கு மையம்
ஆனால் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இந்தநிலையில் ராஜப்பா பூங்காவில் கூடுதலாக சிறுவர்களுக்கான நவீன பொழுதுபோக்கு மையம் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் திறப்பு விழா நேற்றுகாலை நடந்தது. விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு நவீன பொழுதுபோக்கு மையத்தை திறந்து வைத்தார்.இந்த மையத்தில் சிறுவர்களை கவரும் விளையாட்டு சாதனங்கள், பேய் வீடு போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் ராஜப்பா பூங்காவும் மக்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் சண்.ராமநாதன் கூறும்போது, பள்ளி சீருடை அணிந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு குறைந்த அளவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.விழாவில் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், கண்காணிப்பாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், கவுன்சிலர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.