வீடு புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே வீடு புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;

Update: 2022-11-16 19:00 GMT

களக்காடு:

களக்காடு அருகே வீடு புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தொழிலாளி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 40), தொழிலாளி. இவரது மனைவி ரெஜினா. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு 2 பேருக்கும் விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது. இதற்கு தோப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த தீனதயாளனும், அவரது மனைவி செல்வியும் (51) தான் காரணம் என ஜெயசீலன் கருதினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வி வீட்டில் இருந்த போது, ஜெயசீலன் திடீரென்று வீட்டிற்குள் புகுந்து அவதூறாக பேசினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் அவருக்கு தலை, கை, கைவிரல்கள், கால்களில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வலைவீச்சு

இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயசீலனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்