பள்ளிக்கூட கட்டிடங்களின் தன்மையை உறுதி செய்ய வேண்டும்-மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் அறிவுறுத்தல்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட கட்டிடங்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் அறிவுரை வழங்கினார்.

Update: 2023-05-05 19:00 GMT

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட கட்டிடங்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் அறிவுரை வழங்கினார்.

வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரான தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், புதுமைபெண் திட்டம் போன்ற திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பள்ளிக்கூடங்கள்

விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பு, அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் குறித்தும், கட்டிடங்களின் பாதுகாப்பு தன்மை உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து பாதுகாப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சரின் காலைஉணவு திட்டத்தை பள்ளிகள் திறந்த பிறகு நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பு நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

முன்னதாக பாளையங்கோட்டை முத்தூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பள்ளிக்கூட கட்டுமான பணிகள், அங்கன்வாடி கட்டிடத்தையும், வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரெட்டியார்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பது குறித்து பார்வையிட்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர்ஆலம், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்