போடிப்பட்டி
உடுமலை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் போதுமான அளவில் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வைகாசி பட்டம்
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் காணப்படும் என்பதால் சித்திரை மாதத்தில் பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு தயக்கம் இருக்கும். அதேநேரத்தில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கும் வைகாசி பட்டத்தில் போதுமான நீர் வளம் கொண்ட விவசாயிகள் சாகுபடி பணிகளைத் தொடங்கி விடுவார்கள்.
இந்த பட்டத்தில் தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிப் பயிர்கள் மட்டுமல்லாமல் மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள். அதனைக் கருத்தில் கொண்டு தற்போது உடுமலை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விதைகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விதை உற்பத்தி
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஆண்டுதோறும் உடுமலை வட்டார விவசாயிகளின் விதைத்தேவை குறித்து உத்தேச கணக்கீடு செய்யப்படுகிறது. அதனடிப்படையில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதை உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் அறுவடை செய்யப்பட்ட விதைகளுக்கான தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை மூலம் தரமான விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. நமது தேவைக்கு அதிகமாக விதைகள் உற்பத்தி செய்யப்படும் போது அவை மற்ற வட்டாரங்களுக்கு வழங்கப்படுகிறது.
தற்போது கரீப் மற்றும் ரபி பருவத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விதைகள் இருப்பு உள்ளது. அதன்படி கோ 51 ரக நெல் விதைகள் 10 டன், ஏடிடிஆர் 45 ரக நெல் விதைகள் 2 டன் இருப்பு உள்ளது.இதுதவிர 2 டன் கொண்டைக்கடலை, 1200 கிலோ நிலக்கடலை, 793 கிலோ உளுந்து, 540 கிலோ வீரிய ஒட்டு ரக மக்காசோளம் ஆகிய விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 15 ஏக்கரில் உளுந்து விதைப்பண்ணை, 5 ஏக்கரில் சோளம் விதைப்பண்ணை, 5 ஏக்கரில் கம்பு விதைப்பண்ணை ஆகியவை அமைக்கப்பட்டு விதை உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களுக்குத்தேவையான தரமான விதைகளை வேளாண்மைத்துறை அலுவலகம் மூலம் மானிய விலையில் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
============
உடுமலை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளை பார்வையிடும் அதிகாரிகளை படத்தில் காணலாம்.
==========