மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி என்ஜினீயரிங் மாணவர் சாவு
புதுக்கடை அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
என்ஜினீயரிங் மாணவர்
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே உள்ள இனயம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் கலிஸ்டன். இவருடைய மகன் லின்டோ டேவிட் (வயது 20).
சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் லின்டோ டேவிட் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் அவர் விடுமுறையில் சொந்த ஊரில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு லின்டோ டேவிட் தனது மோட்டார் சைக்கிளில் தேங்காப்பட்டணத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
விபத்தில் சாவு
செந்தரை பகுதியை சென்றடைந்த போது திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற மின்கம்பத்தில் மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் லின்டோ டேவிட் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.