மேல் படிப்பிற்கான நுழைவு தேர்வு மதிப்பெண் குறைந்ததால் என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
மேல் படிப்பிற்கான நுழைவு தேர்வு மதிப்பெண் குறைந்ததால் என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது ஆர்.என்.கண்டிகை கிராமம். இங்கு வசித்து வந்தவர் தமிழரசு (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் மேல் படிப்பு படிப்பதற்காக ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.
ஜே.இ.இ நுழைவு தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வந்த நிலையில் அதில் தமிழரசு 7 மதிப்பெண்கள் குறைவாக பெற்றார். இதனால் மேல்படிப்பை தொடர முடியாத நிலையில் தமிழரசு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து அவர் குடித்தார். உயிருக்கு போராடிய நிலையில் தமிழரசு கிடந்ததை கண்டு அவரது வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை உறவினர்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழரசு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல் படிப்பிற்கான நுழைவு தேர்வு மதிப்பெண் குறந்ததால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.