என்ஜினீயரிங் கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆண்டு 2 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது.
சென்னை,
2023-24-ம் கல்வியாண்டில் 430 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு ஏற்கனவே முடிந்து, சான்றிதழ் சரிபார்ப்பும் நிறைவு பெற்றுவிட்டது.
இதன் மூலம் நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே ஆகஸ்டு மாதத்தில் முதலில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த அட்டவணையை மாற்றி, ஜூலை முதல் வாரத்தில் ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.
அந்த அட்டவணையும் மாற்றப்பட்டு, தற்போது 3-வது முறையாக என்ஜினீயரிங் படிப்புக்கான புதிய அட்டவணையை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டு இருக்கிறார்.
22-ந்தேதி தொடங்குகிறது
கலந்தாய்வு அட்டவணை மாற்றுவதற்கு முக்கிய காரணமாக, மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடங்குவதில் ஏற்படும் தாமதத்தைதான் சுட்டிக்காட்டுகிறார்கள். ஏனென்றால், மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு முன்பு என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டால், அதில் சேரும் மாணவர்கள், மீண்டும் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் இடம் கிடைத்தால் சென்றுவிடுகிறார்கள்.
இதனால் என்ஜினீயரிங் படிப்பில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் நோக்கில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வை மையப்படுத்தியே என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
3-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையில், என்ஜினீயரிங் கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
3 சுற்று கலந்தாய்வு
அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட இருக்கிறது. இதற்கு முந்தைய அட்டவணைகளில் 4 சுற்றுகளாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் புதிய அட்டவணையில் அது குறைக்கப்பட்டுவிட்டது.
அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி வரையும், அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 2-ம் சுற்றும், அடுத்த மாதம் 22-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை 3-வது சுற்று கலந்தாய்வும் நடக்க இருக்கிறது. அதன்பின்னர், செப்டம்பர் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை துணை கலந்தாய்வும், 10 மற்றும் 11-ந் தேதிகளில் எஸ்.சிஏ. பிரிவில் இருந்து எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அறிவுறுத்தி உள்ளது. அதனை பின்பற்றி கலந்தாய்வு, மாணவர் சேர்க்கையை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், என்ஜினீயரிங் படிப்பில் காலியிடங்கள் இல்லாத வகையில் 3 சுற்று கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, சிறப்பு கலந்தாய்வு நடத்தி அதன் மூலமும் இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
முதலாம் ஆண்டு வகுப்புகள்
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்து 804 பேருக்கு இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் இடங்கள் கிடைக்க இருக்கின்றன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 236 இடங்கள் அதிகம் என்றும், கலந்தாய்வு முடிந்து ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்து முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
ஒரு கல்லூரிகளில் சேர்ந்து வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்து அங்கு சேருவதற்கு விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள், முதலில் சேர்ந்த கல்லூரியில் செலுத்திய கட்டணத்தை அந்த கல்வி நிறுவனம் அவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. அதனை கண்டிப்பாக கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
2 புதிய படிப்புகள்
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. 430 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் இருக்கின்றன. இது கடந்த ஆண்டை விட 3 ஆயிரத்து 100 இடங்கள் அதிகம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
அதற்கு 2 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்பில், 'அட்வான்ஸ்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி, டிசைன் டெக்னாலஜி' ஆகிய 2 படிப்புகள் புதிதாக கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.