என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கோவையில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கோவையில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயர்
சிவகங்கை மாவட்டம் இடையான்குடியை சேர்ந்தவர் பிராங்கிலின் ஆரோன் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சொந்த ஊரில் வேலை தேடினார். ஆனால் அங்கு கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து அவர் வேலை தேடி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் அவர் சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியதுடன், கோவையில் வேலை தேடினார். அவருக்கு தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் வேறு வழியின்றி அந்த வேலையை செய்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இருந்தபோதிலும் தான் படித்ததற்கு ஏற்ற வேலைக்காக பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி வைத்தார். ஆனால் எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக மனவேதனையில் அவர் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த விடுதி ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிராங்கிலின் ஆரோனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிராங்கிலின் ஆரோன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.