ரெயில்வே மேம்பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழிக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து என்ஜினீயர் சாவு
ரெயில்வே மேம்பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழிக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில், சென்னை என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.;
சேலம்,
நாமக்கல் மாவட்டம் சுள்ளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் யோகேஸ்வரன் (வயது 26). இவர் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 29-ந் தேதி முதல் 3 நாட்கள் அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார்.
பின்னர் அவர் விடுமுறை முடிந்து நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ராசிபுரம் பிரிவு ரோட்டை அடுத்து, மேம்பாலம் அமைப்பதற்காக ரெயில்வே தண்டவாளம் அருகே கான்கிரீட் போடுவதற்காக சுமார் 20 அடி ஆழ குழி தோண்டப்பட்டு இருந்தது.
பரிதாப சாவு
அதிகாலையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த என்ஜினீயர் யோகேஸ்வரன், குழி இருப்பது தெரியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். இதில் மோட்டார் சைக்கிளுடன் எதிர்பாராதவிதமாக குழிக்குள் பாய்ந்தார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலியான யோகேஸ்வரனுக்கு மதுமிதா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.