விமானத்தில் கழுகு மோதியதால் என்ஜின் சேதம்: அவசரமாக தரை இறக்கப்பட்டதால் 164 பயணிகள் தப்பினர்

கோவையில் இருந்து புறப்பட்ட ஷார்ஜா விமானத்தில் கழுகுகள் மோதியதால் என்ஜின் சேதமானது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 164 பயணிகள் உயிர் தப்பினர்.;

Update: 2023-01-02 21:23 GMT

கோவை,

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று காலை 7 மணிக்கு 164 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானத்தின் இடது என்ஜினில் 2 கழுகுகள் பறந்து வந்து மோதின. அந்த வேகத்தில் ஒரு கழுகு என்ஜினுக்குள் சிக்கியது.

உடனே சுதாரித்துக்கொண்ட விமானி சாதுரியமாக செயல்பட்டு அவசர அவசரமாக விமானத்தை கோவை விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பயணிகள் தப்பினர்

இதைத்தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் 164 பேரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வெளியூர் பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். கோவையை சேர்ந்த பயணிகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த என்ஜினீயர்கள் விமானத்தை ஆய்வு செய்தபோது கழுகு மோதியதால் என்ஜின் சேதம் அடைந்ததும், அந்த கழுகு இறந்த நிலையில் என்ஜினுக்குள் இருப்பதும் தெரியவந்தது.

சரி செய்யும் பணி

உடனே தொழில்நுட்ப என்ஜினீயர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சேதம் அடைந்த என்ஜினை சரி செய்ய கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டன. பழுதான என்ஜின் சரி செய்யப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் ஷார்ஜா புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்