அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி

வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகளில் லஞ்சம் ஊடுருவி இருப்பை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கூறியுள்ளது.

Update: 2024-03-15 22:19 GMT

கோப்புப்படம் 

மதுரை,

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரி ஜாமீன் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இரு நீதிமன்றத்திலும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடியானது.

இந்த நிலையில், அங்கித் திவாரி 2-வது முறையாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், கைதான நாளிலிருந்து நூறு நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளேன். வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட கூடுதல் அரசு வக்கீல் திருவடிக்குமார், ''அங்கித் திவாரி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிக்கை தயார் நிலையில் உள்ளது. எனவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி ஜாமீன் கோர முடியாது. அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என்றார்.

பின்னர் நீதிபதி, ''அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கு தீவிரமானது. அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. சட்டவிரோத செயல்களையும், லஞ்சத்தையும் தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகளிலும் லஞ்சம் ஊடுருவி இருப்பதை ஏற்க முடியாது.

மனுதாரர் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்