தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் பரபரப்பு கடிதம்

மதுரை போலீசார் சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பி வைக்கப்பட்ட சம்மனில் உரிய தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-27 17:38 GMT

சென்னை,

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சுரேஷ்பாபு சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சூழலில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது சட்டவிரோத செயல் என்றும், சோதனை என்ற பெயரில் அடையாளம் தெரியாத ஏராளமான பேர் புகுந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடி சென்று விட்டனர் என்றும் அமலாக்கத்துறை சார்பில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு பரபரப்பு புகார் மனு அனுப்பப்பட்டது.

இந்த புகாரை தமிழக போலீசார் மறுத்தனர். இதற்கிடையே அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த சென்றபோது தங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மதுரை போலீசில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் மீது மதுரை போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் சார்பில் உரிய ஆதாரங்களை அளிக்கும்படி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நேற்று இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அமலாக்கத்துறை சார்பில் எந்த ஆதாரங்களும் வழங்கப்படவில்லை. அதோடு விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகுமாறு மூன்றாவது முறையாக மீண்டும் போலீஸ் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், "மதுரை போலீசார் சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பி வைக்கப்பட்ட சம்மனில் உரிய தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மன் அனுப்பியது யார்? என்பது பற்றிய விபரம் இல்லை. மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்பது என்பது உள்ளநோக்கம் கொண்டதாக உள்ளது. அதோடு தற்போதைய சம்மனில் எந்த மாதிரியான விளக்கம் வேண்டும் என்பது பற்றியும் தெரிவிக்கப்படவில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்