வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் மாலத்தீவுக்கு வேலைக்கு தமிழகத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் -அமைச்சர் செஞ்சி மஸ்தான்
வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் மாலத்தீவுக்கு வேலைக்கு தமிழகத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.;
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு வாழ்வாதாரம் தேடி செல்லும் தமிழர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாலத்தீவு நாட்டுக்கு சென்று அந்த நாட்டு அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் அங்கு எந்தந்த வேலைகளுக்கு ஆட்கள் தேவை என ஆலோசித்துவிட்டு வந்தோம். இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறுவோம். அங்கு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சட்டம், அவர்களது குழந்தைகளுக்கான கல்வி வழங்கும் திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தமிழகத்தில் இருந்து மாலத்தீவுக்கு சரியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாளர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் பணி தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.