டிராக்டர் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

தியாகதுருகம் அருகே டிராக்டர் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-10 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே சிறுவல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் வெங்கடேசன் (வயது 39). தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக தனது மனைவி நிவாஷினி (30) மற்றும் மகன் பிரகதீஸ்வரன் ஆகியோருடன் எலவனாசூர்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு வேலை முடிந்ததும், அவர்கள் மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். தியாகை பெரியநாயகி அம்மன் கோவில் அருகே வந்தபோது முன்னால் சென்ற டிராக்டரை வெங்கடேசன் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடசன் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் நிவாஷினி, பிரகதீஸ்வரன் ஆகியோர் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக டிராக்டர் டிரைவரான தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (47) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்