டாப்சிலிப்பில் யானை சவாரி தொடங்க வேண்டும்

டாப்சிலிப்பில் 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள யானை சவாரியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-05-11 19:45 GMT

பொள்ளாச்சி

டாப்சிலிப்பில் 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள யானை சவாரியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

யானை சவாரி

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பிற்கு விடுமுறை நாட்களில் கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து யானைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் டாப்சிலிப் கோழிகமுத்தியில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளை கொண்டு யானை சவாரி நடத்தப்பட்டது. இதற்காக நன்கு பயிற்சி பெற்ற கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு யானை சவாரி நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு சவாரி தொடங்குவதற்கு அனுமதி இல்லாததால் 3 ஆண்டுகளாக யானை சவாரி தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் யானை சவாரி நடந்த இடம் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

டாப்சிலிப்பிற்கு வந்தால் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு வனத்துறை வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். முகாமிற்கு செல்லும் வழியில் மான், யானை போன்ற வனவிலங்குகளை பார்க்க முடிகிறது. இருப்பினும் வனப்பகுதிக்குள் யானையில் சவாரி செல்வது என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

மீண்டும் நடத்த வேண்டும்

இதனால் டாப்சிலிப் என்றால் யானை சவாரி செல்லலாம் என்ற ஆசையில் தான் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு யானை சவாரி இல்லாததால் ஏமாற்றம் அடைகின்றனர். கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். எனவே டாப்சிலிப்பில் மீண்டும் யானை சவாரி நடத்துவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அனுமதி கிடைக்கவில்லை

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், டாப்சிலிப்பில் குறிப்பிட்ட தூரம் வனப்பகுதிக்குள் சென்று வரும் வகையில் யானை சவாரி நடத்தப்பட்டது. இதற்காக 60 வயதிற்கு கீழ் உள்ள பயிற்சி பெற்ற கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக யானை சவாரி நடத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு யானை சவாரியை மீண்டும் நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அனுமதி கிடைத்த பிறகு மீண்டும் யானை சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்