சங்கரன்கோவிலில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கரநாராயண சுவாமி கோவில்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும்.
அதுேபால் இந்த ஆண்டிற்கான திருவிழா 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.15 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி
சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று கோவில் யானை 'கோமதி' பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு காலை கோவிலில் இருந்து கோமளாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கோவிலில் இருந்து புறப்பட்டு களப்பாகுளத்தில் உள்ள கல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பெருங்கோட்டுரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பூஜைகளை சரவணன் பட்டர் தலைமையிலான பட்டர்கள் செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து கோவில் யானை 'கோமதி' பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மே மாதம் 3-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.