தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து 'கருப்பன்' யானை தொடர்ந்து அட்டகாசம்- 250 வாழைகள், ½ ஏக்கர் முட்டைக்கோஸ் நாசம்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த ‘கருப்பன்’ யானை 250 வாழைகள், ½ ஏக்கர் பரப்பளவிலான முட்டைக்கோஸ் பயிரை நாசப்படுத்தியது.

Update: 2023-04-07 20:59 GMT

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த 'கருப்பன்' யானை 250 வாழைகள், ½ ஏக்கர் பரப்பளவிலான முட்டைக்கோஸ் பயிரை நாசப்படுத்தியது.

கருப்பன் யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியேறிய கருப்பன் என்ற காட்டு யானை அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. மேலும் தோட்டத்தில் காவல் காத்த 2 விவசாயிகளையும் கொன்றது.

இதைத்தொடர்ந்து அந்த யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து முதல் முறை ராமு, சின்னத்தம்பி என்ற கும்கி யானைகளும், அதன்பின்னர் கலீம், அரிசிராஜா, கபில்தேவ் என்ற 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கிகளின் உதவியுடன் வனத்துறையினர், மருத்துவ குழுவினர் தோட்ட பகுதிகளுக்கு சென்று கருப்பன் யானைக்கு 6 முறை மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் மயக்க ஊசிக்கு மயங்காமல் கருப்பன் யானை ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் தப்பி சென்றது.

வாழை தோட்டத்துக்குள் புகுந்தது

இதனால் கருப்பன் யானையை பிடிக்க வந்த கும்கி யானைகளும் டாப்சிலிப்புக்கே திருப்பி அனுப்பப்பட்டன. தொடர்ந்து கருப்பன் யானை தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்து மீண்டும் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கருப்பன் யானை சிக்கவில்லை. இதனால் கருப்பனை பிடிக்க வந்த 2 கும்கி யானைகளும் முதுமலை தெப்பக்காட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை மீண்டும் வெளியேறியது. பின்னர் அந்த யானை அருகே மாதள்ளி கிராமத்தில் உள்ள சுட்பண்ணா (வயது 55) என்பவரது வாழைத் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகளில் குருத்துக்களை தின்றும், மரங்களை மிதித்தும் நாசம் செய்ய தொடங்கியது.

2 மணிநேரம் போராட்டம்

சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த சுட்பண்ணா திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வீட்டு்க்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது தோட்டத்தில் யானை வாழைகளை சேதப்படுத்துவது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுபற்றி அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கு சென்றனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கருப்பன் யானையை ஒலி எழுப்பி காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை அங்கிருந்து சென்றது.

முட்டைக்கோஸ் சேதம்

அதன்பின்னர் தமிழ்புரம் பகுதியில் உள்ள பசுவண்ணா என்பவரது முட்டைக்கோஸ் தோட்டத்துக்குள் கருப்பன் யானை புகுந்தது. பின்னர் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த முட்டைக்கோசை சேதம் செய்தது. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை காட்டு்க்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை அங்கிருந்து சென்றுவிட்டது.

கருப்பன் யானையால் 250 வாழைகளும், சுமார் ½ ஏக்கர் பரப்பளவிலான முட்டைக்கோஸ் பயிரும் நாசமடைந்தது.. தொடர்ந்து பயிர்களை சேதம் செய்து வரும் கருப்பன் யானையால் தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். கருப்பன் யானையை எப்படியாவது பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்