கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறி தமிழகத்துக்கு படையெடுக்கும் யானை கூட்டம்

கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறி தமிழகத்துக்கு யானை கூட்டம் படையெடுக்கிறது.;

Update: 2023-01-31 21:26 GMT

தாளவாடி

கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறி தமிழகத்துக்கு யானை கூட்டம் படையெடுக்கிறது.

கர்நாடக வனப்பகுதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருள்வாடி கிராமம் தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கர்நாடக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை கூட்டம் அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி விவசாய நிலத்துக்குள் புகுந்தன. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்தனர்.

முகாமிட்டன

இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த வனத்துறையினர் யானைகள் அங்கிருந்து அருகே உள்ள விவசாய தோட்டங்களுக்குள் செல்லாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

2-வது நாளான நேற்றும் யானை கூட்டம் அருள்வாடி கிராமத்தின் அருகே முகாமிட்டுள்ளது. வனத்துறையினரும் அங்கேயே உள்ளார்கள்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக கர்நாடக வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தமிழக வனப்பகுதிக்கு படையெடுக்கின்றன. அவ்வாறு இடம் பெயரும்போது கிராமங்களுக்குள்ளும், விவசாய தோட்டங்களுக்குள்ளும் யானைகள் புகாதவாறு வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்