விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் யானை

ஓசூர் அருகே சினிகிரிப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலங்களில் யானை சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-31 18:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகே சினிகிரிப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலங்களில் யானை சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து 2 யானைகள் தனித்தனியாக பிரிந்து கிராம பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சானமாவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை சினிகிரிப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தது. இந்த யானை அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்து சேதப்படுத்தியது. நேற்று காலை அந்த யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தது.

எச்சரிக்கை

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டும் யானையை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டினர்.

சானமாவு வனப்பகுதியில் 2 யானைகள், தனித்தனியாக சுற்றித்திரிவதால் சானமாவு, பீர்ஜேப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, போடிச்சிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், விவசாய நிலங்களுக்கு இரவு நேரத்தில் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்