ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் யானை; வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல அறிவுறுத்தல்
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் யானை; வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல அறிவுறுத்தல்
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் யானை ஆசனூரில் இருந்து திம்பம் செல்லும் சாலையை கடந்து சென்றது. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் உணவு, தண்ணீருக்காக சாலையை கடந்து செல்கிறது. எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை மெதுவாக இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.