பர்கூர் மலைப்பகுதியில் தோட்டத்தில் காவல் காத்த விவசாயி யானை தாக்கி படுகாயம்
பர்கூர் மலைப்பகுதியில் தோட்டத்தில் காவல் காத்த விவசாயி யானை தாக்கி படுகாயம்;
அந்தியூர்
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதி துருசணாம்பாளையத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 60). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் பர்கூர் வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு அவர் 2 ஏக்கர் பரப்பளவில் ராகி பயிர் செய்துள்ளார். இந்த நிலையில் மாதையன் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் பரண் அமைத்து காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை அங்கு வந்தது. பின்னர் அந்த யானை பரணில் தூங்கி கொண்டிருந்த மாதையனை துதிக்கையால் தூக்கி கீழே வீசியது.
இதனால் அவர் படுகாயம் அடைந்தார். வலி தாங்க முடியாமல், 'அய்யோ, அம்மா' என்று அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து விவசாயிகள் அங்கு ஓடிவந்தனர். பின்னர் யானையை அங்கிருந்து விரட்டிவிட்டனர். அதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த மாதையனை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.