தாளவாடி அருகே நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை
தாளவாடி அருகே நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை;
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, மான், சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்கும், ஊருக்குள் புகுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் அந்த யானை தாளவாடி அருகே உள்ள திகினாரை கிராமத்துக்குள் புகுந்தது.
யானையின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் வெளியே வந்து பார்த்தனர். அங்கு ஒற்றை யானை வீதிகளில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 'விவசாய தோட்டத்தில் புகுந்து வந்த யானை தற்போது ஊருக்குள்ளும் புகுந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானை ஊருக்குள் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.