மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கலாமே!

மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கலாமே! ஓங்கி ஒலிக்கும் பொதுமக்கள் குரல்;

Update: 2022-10-31 16:48 GMT

தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது.

400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

தத்தளிக்கிறது

மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 226 கோடிக்கு கடனில் தத்தளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டியது கட்டாயமாகிவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருந்தாலும் மின்கட்டண உயர்வு 'ஷாக்' தருவதாக உணர்ந்து இருக்கும் பொதுமக்கள், கட்டணம் வசூலிக்கும் முறையையாவது மாற்றி அமைக்க மாட்டார்களா? என்ற மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது.

200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.225 வசூலிக்கப்படுகிறது.

400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1,125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாதந்தோறும்

2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.

ஏன் என்றால்? உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்?

தற்போது அவர் ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது. மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது.

ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு மாதத்திற்கு 200 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்.தற்போது 400 யூனிட்டுக்கு அவர் ரூ.1,125 செலுத்த வேண்டும். மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் ரூ.225 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். இதனால்தான் மாதந்தோறும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

இதுபற்றியும், மின்சார கட்டண உயர்வு பற்றியும் பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

நடுத்தர மக்களுக்கு பாதிப்பு

ஆம்பூர் பள்ளித் தெருவை சேர்ந்த எஸ்.மோகன் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினால் ஏற்கனவே மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தற்போது மின் கட்டண உயர்வு என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு விலையையும் உயர்த்தியதால் பாமர மக்கள் தாங்கள் அன்றாடம் சம்பாதிக்கும் ஊதியத்தை இதற்கே செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் காவல் நிலையம் வீதியை சேர்ந்த குடும்பத் தலைவி கே.வித்யா ஏசுராஜ்:-

எங்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். எனது கணவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை கவனித்து வருகிறேன். வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு தற்போது தமிழக அரசு திடீரென மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. மின் கட்டண உயர்வுக்கு முன்பு ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்தோம். தற்போது மின் கட்டண உயர்வால் இந்த மாதம் ரூ.1,750 கட்டணம் வந்துள்ளது. இதனால் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு மின் கட்டண உயர்வால் பல பாதிப்புகள் ஏற்படும். எனவே மின் கட்டண உயர்வை திரும்பப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறுபரிசீலனை

ஆற்காடு பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சலி:- தற்போது தான் கொரோனா பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். இந்த நேரத்தில் மின் கட்டண உயர்வு என்பது எங்களைப் போன்ற ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நபர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும். வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு இதையெல்லாம் கருத்தில் கொண்டு வீட்டின் உரிமையாளர்களும் வீட்டு வாடகையை உயர்த்தும் நிலை உருவாகும். இது குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்து மீண்டும் பழைய மின் கட்டணத்தையே கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்குப்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி வி.அருள்:-

மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது சாமானிய மக்களை பாதிக்கும் நடவடிக்கையாகும். புதிய மின் இணைப்புக்கான டெபாசிட் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி தரும் நடவடிக்கையாகும். சாமானிய மக்களை பாதிக்கும் இந்த மின் கட்டண உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் ஏழை மக்களின் சுமை குறைய, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றார்.

கலவை டி.புதூரை சேர்ந்த தயாளன்:- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதற்கு முதலில் நன்றி. இருப்பினும் இப்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்த நாங்கள் தற்போது ரூ.2,000 கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மாதாந்திர செலவில் ஆயிரம் ரூபாய் பட்ஜெட் அதிகமாய் உள்ளது. இதன்காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளனர். உடனடியாக மின் கட்டணத்தை குறைத்து, பொதுமக்கள், விவசாயிகளின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றார்.

சுமையாக உள்ளது

செய்யாறு பகுதியை சேர்ந்த ஜி.கார்த்திகேயன்:- தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் கடந்த மாதம் செலுத்திய பில் தொகையை விட கூடுதலாக 50 சதவீதம் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் விலைவாசி உயர்வால் போதிய வருமானமின்றி தவிக்கும் நடுத்தர குடும்பத்தில், மின்சார கட்டண உயர்வு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதம் ஒருமுறை கணக்கீடு செய்தால் மின்கட்டணம் செலுத்திட நடுத்தர குடும்பத்தினருக்கு ஏதுவாக இருக்கும். அதே நேரத்தில் அனைவருக்கும் இலவச மின்சாரம் 100 யூனிட் என்பது ஏற்புடையது அல்ல. கட்டணம் இல்லை என்பதால் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய மின்சாரத்தினை தேவையற்ற முறையில் விரையம் செய்கின்றனர் என்றார்.

வட இலுப்பை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி:- தற்போதைய மின் கட்டண உயர்வு கிராமப்புற மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த முறை கட்டிய மின் தொகையை விட தற்போது இருமடங்காக கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வருமானம் இன்றி தவிக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் மின் கட்டண உயர்வு என்பது பெரும் சுமை தான். மாதம் ஒரு முறை மின் கணக்கிடும் முறையை அமல்படுத்திட வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.

திரும்பப்பெற வேண்டும்

வேலூர் சார்பனாமேடு பகுதியை சேர்ந்த அனீப்:- நான் சிறிய மளிகை கடை நடத்தி வருகிறேன். இதன்மூலம் குறைந்த வருமானமே கிடைக்கிறது. மின்கட்டண உயர்வுக்கு முன்பு 100 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.952 தான் செலுத்தினேன். அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதன் காரணமாக ரூ.272 அதிகமாக செலுத்தி உள்ளேன். கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. அதற்குள் அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் என் குழந்தைகளின் படிப்பு செலவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு சாமானிய பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எனவே அரசு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றார்.

தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டியை சேர்ந்த ஆதிமோகன்:- எனது வீட்டில் கடந்த முறையைவிட தற்போது குறைந்த அளவே மின்சாரம் பயன்படுத்தி உள்ளோம். ஆனாலும் 700 ரூபாய் அதிகமாக மின்கட்டணம் வந்துள்ளது. இதனால் எனது குழந்தைகளின் படிப்பு, மருத்துவம் உள்ளிட்ட இதர செலவுகளை மேற்கொள்ள சிரமமாக உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மின்விசிறி, ஏ.சி. உள்ளிட்ட மின்சாதனங்களை குறைவாகவே பயன்படுத்துகிறோம். கோடைகாலத்தில் மின்விசிறி, ஏ.சி. இயங்காமல் சிறிதுநேரம் கூட வீட்டில் இருக்க முடியாது. அப்போது இதனை விட பலமடங்கு மின்கட்டணம் வரும். எனவே அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கிட வேண்டும் என்றார்.

ஓங்கி ஒலிக்கும் குரல்

அமலுக்கு வந்துள்ள மின்சார கட்டண உயர்வு மக்களுக்கு 'ஷாக்' அடிக்கும் வகையில் இருந்தாலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலையை மக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது.

டியூப் லைட்டை பகலில் தேவை இல்லாமல் பயன்படுத்தாமல் ஆப் செய்ய வேண்டும். காற்றுக்காக மின்விசிறி பயன்பாட்டை குறைக்க வீட்டு ஜன்னல், கதவை திறந்து வைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில்தான் டி.வி. பார்க்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்க தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் தமிழக அரசு மாதந்தோறும் மின்சார கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் கொண்டு வரவேண்டும் என்ற குரலும் மக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்