தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் மேலும் உயரும்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் மேலும் உயரும் என நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.;

Update: 2022-11-06 18:45 GMT

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டை மேடு பகுதியில் நேற்று அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கி பேசியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 2026 சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி, இனி தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தான் என்று சொல்லும் அளவுக்கு, இந்த கூட்டம் சிறப்பாக அமைந்திருக்கிறது. வருகிற 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிச்சயமாக தமிழகத்தில், ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என இந்த நேரத்தில் உறுதி எடுத்துக் கொள்வோம். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'எனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டும் அல்ல; ஓட்டு போடாதவர்களும், ஏன் ஓட்டு போடவில்லை என வருத்தப்பட வேண்டும்' என சட்டசபையில் சொன்னார்.

மின்சார கட்டணம் 30 சதவீதம் உயரும்

நாங்கள் இந்த நேரத்தில் சொல்கிறோம், ஓட்டு போட்டவர்கள் மட்டும் அல்ல, ஓட்டு போடாத எல்லோரும் ஏன், தி.மு.க.வுக்கு ஓட்டுபோட்டோம் என்று கஷ்டப்படுகிறோம் என்கிற சூழ்நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மின்சார கட்டணம். இப்போதுதான் பாதி கட்டணம் கட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். அடுத்த மாதத்தில் இருந்துதான், முழுமையான மின்சாரம் கட்டணம் வர இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, மின்சார கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது என்று சொன்னார்.

ஆனால் தற்போது ரூ.14 ஆயிரம் இருந்த இடத்தில், ரூ.36 ஆயிரம் வந்திருக்கிறது. வீட்டுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடுத்தார். ஆனால், தற்போது ஒவ்வொருவருக்கும், ரூ.500, ரூ.600 என வர இருக்கின்றது. இது 4 பில் மட்டும்தான். 4 பில்லுக்கு பின்பு, அடுத்த ஜூன் மாதத்தில் இருந்து, இன்னும் 6 சதவீதம் உயர இருக்கிறது. 4 ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சி முடியும் போது, இன்னும் 30 சதவீதம் மின் கட்டணம் உயர போகிறது. தி.மு.க. ஓட்டுப்போட்ட மக்களுக்கு கொடுத்த பரிசு மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வுதான்.

யாரும் இல்லை

தி.மு.க.வினர் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கிறது என்ற காரணத்தினால், நமது இயக்கத்தில் இருந்து ஒரு 'பி' டீமை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த 'பி' டீமை உருவாக்கி அதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'பி' டீம் இல்லை, 'சி' டீம் என எத்தனை அணி வந்தாலும், எடப்பாடி பழனிசாமியை வெல்வதற்கு இனிமேல், தமிழகத்தில் யாரும் இல்லை. நான் கடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒன்று சொன்னேன். பி.எச்.பாண்டியன் கவர்னரிடம் கொடுத்த காரணத்தினால், தற்போது ஜெயலலிதா நம்மிடத்தில் இல்லை. அதன் பேரில் வழக்கு போட்டார்கள் என்று சொன்னேன்.

அதற்கு பதில் சொல்லுகின்ற வகையில், மனோஜ் பாண்டியன் சொல்லி இருக்கிறார், எங்களுக்கு வானலாவிய அதிகாரம் இருந்தது. அதனால் யாரை பற்றியும் கவலையில்லை என்றார். எந்த அதிகாரம் இருந்தாலும், மக்களிடத்தில் அதிகாரம் (பீப்புள் பவர்) இல்லை என்றால் ஜீரோ தான் என்பதை மனோஜ் பாண்டியன் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், என்னை பார்த்து 'பவர்' புரோக்கர் என்று சொன்னார். 5 ஆண்டு காலம் மின்சாரத்துறையில், ஒரு சிறு தவறு நடக்காமல், மின் வெட்டு இல்லாமல், மின் மிகை மாநிலமாக வைத்திருந்தோம் என்பதை நான் சவாலாக சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். நீங்கள் தான் இந்த கட்சியை உடைக்க வந்த புரோக்கர்.

இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளி செங்கோல்

முன்னதாக இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டு, வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் செல்லப்பம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்த எடப்பாடி பழனிசாமி, மாநாட்டு திடலில் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், டாக்டர் சரோஜா, விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், ராமலிங்கம், பரஞ்ஜோதி, வளர்மதி, பூணாச்சி, செம்மலை, அமைப்பு செயலாளர் சேவல் ராஜூ, சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் சாரதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளிபாலுசாமி, மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ். காளியப்பன், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், நாமக்கல் ஒன்றிய செயலாளர்கள் சேகர், ராஜா என்கிற செல்வகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பொன்னுசாமி, மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், அணியாபுரம் ரமேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜி என்கிற விஜயகுமார், மாவட்ட ஆவின் தலைவர் ராஜேந்திரன், கபிலர்மலை வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பரமத்தி ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், ரவி, வெண்ணந்தூர் ஒன்றியக்குழு தலைவர் தங்கம்மாள் பிரகாசம், மசக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பிரகாசம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாத் நன்றி கூறினார். முன்னதாக மாவட்ட எல்லை பகுதியான வெண்ணந்தூரில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதேபோல் மாநாட்டு பந்தல் முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் முளைபாரி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்