மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.;
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் வாயிற்கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 1-12-2018 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களை கொண்டு மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், குறைபாடுகள் இல்லாத சேவைகளை செய்ய மின்வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பேச்சுவார்த்தையில் சுமுகதீர்வு எட்டப்படாமல், காலிப்பணியிடங்களை அவுட்சோர்சிங், ஒப்பந்தமுறை விடும் முடிவை வாரியம் எடுத்தால் கடந்த 10-ந்தேதி ஒத்திவைக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 வழங்க கேட்டு வருகிற 16-ந்தேதி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். முடிவில் சங்க வட்ட பொருளாளர் பழனியாண்டி நன்றி கூறினார். கூட்டத்தில் திரளான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.