கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை 27-ந்தேதி முதல் ரத்து

கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதால் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை வரும் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.;

Update: 2023-08-25 07:47 GMT

சென்னை,

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.279 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால், கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை வரும் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. 7 மாதங்களுக்கு மின்சார ரெயில் சேவை இருக்காது என்று சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் பி.விஸ்வநாத் ஈர்யா, நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது பாதைக்கான பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் வழித்தடத்தில், சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை வரும் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட உள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதியில் 7 மாதங்களுக்கு மின்சார ரெயில் சேவை இருக்காது. அதேநேரத்தில், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மின்சார ரெயில் சேவை வழக்கம்போல இருக்கும்.

ஏற்கனவே, வேளச்சேரி-சேப்பாக்கம் வரை மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, சிந்தாதிரிப்பேட்டை வரை மின்சார ரெயில் சேவை வழங்க முடிவு செய்துள்ளோம். சேப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து போதிய பஸ் வசதி இல்லாதததால், வேளச்சேரி-சிந்தாதிரிப்பேட்டை நிலையம் வரை மின்சார ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது. இதேபோல, கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரெயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.

4-வது பாதை அமைக்க 1992-ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது. நிலப்பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளால் தாமதமாகி வந்தது. தற்போது, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

எனவே, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4 கிலோ மீட்டர் தொலைவிலான 4-வது பாதைக்கான பணிகள் வரும் 27-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.279 கோடி செலவிடப்பட உள்ளது. 7 மாதத்தில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 4-வது பாதை அமைப்பதன் மூலம் தென்பகுதிக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும்.

கடற்கரை-வேளச்சேரி இடையே 122 ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 27-ந்தேதி முதல் 80 மின்சார ரெயில் சேவை மட்டுமே இயக்கப்படும். இதேபோல, திருவள்ளூர்-வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி-வேளச்சேரி ரெயில்கள் சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.

எழும்பூரில் இருந்து அல்லது மற்ற ரெயில் நிலையங்களில் இருந்து வேளச்சேரி வழித்தடத்தை இணைப்பதற்கு கூடுதல் பஸ்கள் தேவைப்படும் பட்சத்தில் வேண்டிய வழித்தடத்தில் கூடுதல் மாநகர பஸ்களை இயக்க போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை வைக்கப்படும். மேலும், சென்னையில் ஒரே டிக்கெட்டில் அனைத்து பொது போக்குவரத்தையும் பயன்படுத்தும் திட்டம் தொடர்ந்து ஆய்வில் உள்ளது.

வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு முதல் ரெயில் காலை 5 மணிக்கும் கடைசி ரெயில் இரவு 10.15 மணிக்கும் இயக்கப்படும். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு முதல் ரெயில் காலை 5.40 மணிக்கும் கடைசி ரெயில் இரவு 11.05 மணிக்கும் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்