நெல்லை- செங்கோட்டை இடையே நாளை முதல் மின்சார ரெயில் இயக்கம்

நெல்லை- செங்கோட்டை இடையே நாளை (17-ந்தேதி) முதல் மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

Update: 2023-06-15 18:45 GMT

தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு, டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின்கள கொண்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை- திருச்செந்தூர் இடையே ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நெல்லை- செங்கோட்டை இடையே ரெயில் பாதையில் தண்டவாளங்கள் வலுப்படுத்தப்பட்டு மின்பாதை அமைக்கப்பட்டது. அதில் மின்சார ரெயில் என்ஜின் மூலம் அதிவேகமாக ரெயில்கள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி நாளை (17-ந்தேதி) முதல் நெல்லை- செங்கோட்டை இடையே ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, மதியம் 1.50 மணி, மாலை 6.15 மணிக்கு இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு காலை 6.40 மணி, காலை 10.05 மணி, மாலை 5.50 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் சிறப்பு ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்படுகிறது.

இதேபோல் செங்கோட்டை- தாம்பரம் இடையே நெல்லை வழியாக வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அதிவிரைவு ரெயில் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது இந்த ரெயில் சென்னை தாம்பரத்தில் இருந்து திருவாரூர் வரையிலும், காரைக்குடியில் இருந்து செங்கோட்டை வரையிலும் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. திருவாரூர்- காரைக்குடி இடையே டீசல் என்ஜினில் இயக்கப்படுகிறது.

நெல்லை- செங்கோட்டை வழித்தடத்தில் மற்ற ரெயில்கள் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மின்சார என்ஜின் ரெயில் இயக்கம் மூலம் இந்த பகுதியில் பயன்படுத்தப்படும் 2 டீசல் என்ஜின்கள் விடுவிக்கப்படுகிறது. நாளை (17-ந்தேதி) முதல் மின்சார என்ஜின் ரெயில் இயக்கப்பட இருப்பதால், நேற்று மின்சார என்ஜினை நெல்லை- செங்கோட்டை இடையே இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு இந்த மின்சார என்ஜின் நெல்லை சந்திப்பில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு சென்றது.


Tags:    

மேலும் செய்திகள்