டிரான்ஸ்பார்மரில் கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி பந்தல் தொழிலாளி பலி- புஞ்சைபுளியம்பட்டியில் பரிதாப சம்பவம்
புஞ்சைபுளியம்பட்டியில் டிரான்ஸ்பார்மரில் கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி பந்தல் தொழிலாளி பலியானார்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் டிரான்ஸ்பார்மரில் கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி பந்தல் தொழிலாளி பலியானார்.
மின்சாரம் தாக்கியது
புஞ்சைபுளியம்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் ரதீஷ் (வயது 40). அதேபோல் தேசிபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (50) இருவரும் பந்தல் அமைக்கும் தொழிலாளர்கள்.
புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இறந்துவிட்டார். நேற்று அவரின் கண்ணீர் அஞ்சலி பேனரை ரதீசும், நாகராஜூம் புஞ்சைபுளியம்பட்டி சத்தி ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரின் கீழே கட்டுவதற்காக சென்றார்கள்.
பேனரை நிறுத்தி கட்டும்போது அதன் ஒருபகுதி டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பியில் பட்டுவிட்டது. இதனால் ரதீசையும், நாகராஜையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள்.
உறவினர்கள் சோகம்
அக்கம் பக்கத்தினர் உடனே ஓடிவந்து இருவரையும் மீட்டு, ஒரு தனியார் ஆம்புலன்ஸ்சில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரதீஷ் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே ரதீஷ் பரிதாபமாக இறந்தார். நாகராஜ் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி பலியான ரதீசுக்கு நித்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானது அவருடைய உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.