உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 6 பதவிகளுக்கு இன்று தேர்தல்
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 6 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.;
6 பதவிகளுக்கு தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு மற்றும் பதவி விலகல் போன்ற காரணங்களால் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 8-வது வார்டு உறுப்பினர் உள்பட 12 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 12 பதவிகளுக்கு 47 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
முடிவில், 6 பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 6 பதவிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
பிரசாரம்
சேலம் ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்களும், நடுப்பட்டி ஊராட்சி 7-வது வார்டுக்கு 3 பேரும், தேவியாக்குறிச்சி ஊராட்சி 2-வது வார்டுக்கு 2 பேரும், கிழக்கு ராஜாபாளையம் ஊராட்சி 9-வது வார்டுக்கு 3 பேரும், கூணான்டியூர் ஊராட்சி 7-வது வார்டுக்கு 3 பேரும், பொட்டனேரி ஊராட்சி 6-வது வார்டுக்கு 2 பேரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இன்று வாக்குப்பதிவு
இந்த நிலையில், 6 பதவிகளுக்கு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதற்காக சேலம் ஒன்றியம் 8-வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள், மீதமுள்ள பகுதிகளில் தேவையான அளவு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 824 பேரும், பெண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 685 பேரும், திருநங்கை ஒருவரும் என மொத்தம் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பணியில் 69 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவுக்கான அனைத்து பொருட்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வருகிற 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.