கீழ்பவானி வாய்க்கால் பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்தவேண்டும்

கீழ்பவானி வாய்க்கால் பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-06-30 21:18 GMT

கீழ்பவானி வாய்க்கால் பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வண்டல் மண்

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பேசும்போது கூறியதாவது:-

பவானி ஆற்றில் கொடிவேரி அணைக்கட்டு அருகில் சாய தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தொழிற்சாலைகளின் கழிவு நீரால் நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எந்த அடிப்படையில் இந்த தொழிற்சாலைக்கு மாசுகட்டுப்பாடு வாரியத்தினர் அனுமதி வழங்கினர் என்று தெரியவில்லை. ஆற்றின் கரையோரத்தில் வீட்டுமனைகள் அமைக்க அனுமதி வழங்கபட்டு வருவதை தடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்ற நிலையில், அனைத்து குளங்களிலும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மாவட்டத்தில் கோபி கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் 191 குளங்களில் மட்டும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 157 குளங்கள் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சிறிய குளங்களாகும். இதனால் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லை. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

தேர்தல்

காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகளின் கழிவுநீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது. இதை தடுக்க பொதுப்பணித்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் 44 பாசன சபைகள் உள்ளன. இந்த சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்தும் வரை துணை தாசில்தார் தகுதியிலான அதிகாரிகளை நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கீழ்பவானி வாய்க்காலில் குடிமராமத்து பணிகளை விரைந்து முடித்து வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும்.

நடப்பு பருவத்தில் நெல் கொள்முதல் விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.27 வழங்க வேண்டும். இதேபோல மஞ்சள், மரவள்ளிகிழங்கு ஆகியவற்றிக்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நில உரிமை சான்று வழங்குவது கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். பட்டா மாறுதல் உத்தரவு வழங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பவர்கிரிட் நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே அடுத்த மாத இறுதிக்குள் இழப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும்.

கான்கிரீட் தளம்

குரங்கன் ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊஞ்சலூர் கிளை வாய்க்கால் பாலம் அகலப்படுத்த வேண்டும். பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கொப்பரை தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதை சரி செய்ய வேண்டும். காலிங்கராயன் வாய்க்காலில் 12-வது மைல் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வேகமாக வருகின்றது.

மொத்தம் உள்ள 56 மைல் தூரத்திற்கும் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் ஏலம் தற்போது 4 இடங்களில் தனித்தனியாக நடைபெற்று வருகின்றது. இதை ஒரே இடத்தில் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறை அதிகாரிகளால் தடை செய்யப்பட்ட மருந்துகள் தாராளமாக விற்பனையாகி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும். பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சியில் இருந்து கழிவுகள் அனைத்தும் ஓடத்துறை ஏரி கரையில் கொட்டி வருகின்றனர். இதனால் தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டு வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மொடச்சூர் சந்தையில் பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிப்பதால் உழவர் சந்தை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளித்து அரசு அதிகாரிகள் பதில் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்