மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்: தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் தேர்வு 9 உறுப்பினர்கள் போட்டியின்றி நியமனம்
சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.;
சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட திட்ட குழு தேர்வு
சிவகங்கை மாவட்ட திட்ட குழு உறுப்பினர்களாக 12 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.இவர்களில் 9 பேர் மாவட்ட ஊராட்சியில் இருந்தும் மீதியுள்ள 3 பேர் பேரூராட்சி மற்றும் நகராட்சியில் இருந்தும் தேர்வு செய்யபடுவார்கள். இந்த 12 பேரையும் சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் உள்ள 16 உறுப்பினர்கள் 4 நகராட்சிகளில் உள்ள 117 வார்டு உறுப்பினர்கள். 11 பேரூராட்சி வார்டுகளில் உள்ள 167 உறுப்பினர்கள் சேர்த்து மொத்தமுள்ள 300 உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.இந்த தேர்தலுக்கான வேட்பாளர் தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி 10-ந் தேதி முடிய நடைபெற்றது.
9 பேர் போட்டியின்றி தேர்வு
இதில் மாவட்ட ஊராட்சியில் இருந்து ஆரோக்கியசாந்தாராணி, சரஸ்வதி, சுந்தர்ராஜன், செந்தில்குமார், மஞ்சரி, மதிவாணன், ரவி, ராதா, ஸ்டெல்லா ஆகிய 9 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதனால் அவர்கள் 9 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 3 இடத்திற்கு பேரூராட்சி மற்றும் நகராட்சியில் இருந்து 3 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கு தி.மு.க. சார்பில் வீனஸ்ராமநாதன், சித்ராதேவி, பாலமுருகன், மற்றும் அ.ம.மு.க. சார்பில் அன்புமணி ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இவர்களை பேரூராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள 284 உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 3 மணி வரை நடைபெற்றது.மொத்தம் உள்ள 284 பேர்களில் 272 பேர் வாக்களித்தனர். இதில் வீனஸ் ராமநாதன் 225 வாக்குகளும், சித்ராதேவி 216 வாக்குகளும், பாலமுருகன் 221 வாக்குகளும் பெற்றனர்.4 வாக்குகள் செல்லாதவை என்றுஅறிவிக்கப்பட்டது. வெற்றிபெற்றவர்கள் மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், முன்னாள் அமைச்சர் தென்னவன் சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.