சென்னையில் தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் தொடங்கியது
முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை மேற்கொள்கிறார்.;
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இந்த தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் தேர்தல் கமிஷனர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் கமிஷனர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஸ், துணை தேர்தல் கமிஷனர்கள் அஜய்பாது, மனோஜ்குமார் சாகு, முதன்மை செயலாளர் மலேய் மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் நாராயணன், அனுஜ் சந்தக் ஆகியோரும் வந்தனர்.
இந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தேச தேர்தல் தேதி, வாக்குச்சாவடி நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.