தூத்துக்குடி அருகே தேர்தல் புறக்கணிப்பு: கிராமத்தில் 50 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு
தூத்துக்குடி அருகே பொட்டலூரணி கிராம மக்கள் மீன் பதப்படுத்தும் ஆலைகளை அகற்றக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே பொட்டலூரணி அருகில் உள்ள மீன் பதப்படுத்தும் ஆலைகளை அகற்றக்கோரி, கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். பொட்டலூரணியில் மொத்தம் 931 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக அந்த கிராமத்தில் தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.
கடந்த 19-ம் தேதி காலையில் வழக்கம்போல் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் வாக்காளர்கள் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. மக்கள் ஆங்காங்கே கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக வாக்குச்சாவடியை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஓட்டுப்போட செல்பவர்கள் யாரையும் தடுக்க கூடாது என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து பொட்டலூரணி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்றார்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர். இதனால் அவர் திரும்பி சென்றார்.
இதற்கிடையே, பொட்டலூரணி வாக்குச்சாவடியில் உள்ள கட்சி முகவரை மாற்றுவதற்காக காரில் சிலர் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த காரை சிறைபிடித்தனர். உடனடியாக போலீசார், காரில் இருந்தவர்களை மீட்டு வேனில் ஏற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் அந்த வேனை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். போலீசார், வேனில் இருந்தவர்களை பத்திரமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை வரை மொத்தம் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார், வாக்குச்சாவடி அலுவலர்கள் 20 பேரும், அந்த பகுதியை சேர்ந்த 9 பேரும் என மொத்தம் 29 பேர் மட்டும் வாக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில், பொட்டலூரணி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் உட்பட 50 பேர் மீது புதுக்கோட்டை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். எல்லநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., விஜயமூர்த்தி புகாரின்படி இந்த வழக்குகள் பதியப்பட்டது.
இதேபோல, அந்த கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் புகாரின்படி, காரில் ஆயுதங்களுடன் வந்த மகாராஜன், 25, தங்கபாண்டி, 31, சித்திரைவேல், 26, ராமர், 24, உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.