ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி படுகாயம்
பாவூர்சத்திரத்தில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி படுகாயம் அடைந்தார்.;
பாவூர்சத்திரம்:
தென்காசியில் இருந்து நெல்லைக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்துக்கு வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டது. அங்குள்ள பிரதான சாலையில் சென்றபோது, தவறுதலாக அந்த பஸ்சில் ஏறிய 80 வயது மூதாட்டி ஒருவரை கீழே இறங்க செய்வதற்காக டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றார். அவர் பஸ்சை நிறுத்துவதற்குள் அந்த மூதாட்டி அவசரமாக கீழே இறங்கியதால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு வந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, ஆம்புலன்சில் ஏற மறுத்த அந்த மூதாட்டியை பெண் போலீஸ் கரிசனையுடன் பேசி, ஆம்புலன்சில் ஏற வைத்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.