பேத்தியின் கணவர் தாக்கியதில் சிகிச்சை பெற்ற முதியவர் சாவு

தா.பழூர் அருகே பேத்தியின் கணவர் தாக்கியதில் சிகிச்சை பெற்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-09 17:44 GMT

தா.பழூர்,

தாக்குதல்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழ சிந்தமணி காலனி தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 70). அவரது பேத்தி பவானி என்பவரை அதே பகுதியை சேர்ந்த தங்கையன் மகன் வெற்றி(25) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். வெற்றி தினமும் மது அருந்திவிட்டு பவானியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பவானி தனது தாத்தா சொக்கலிங்கம் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வெற்றி பவானியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சொக்கலிங்கம் காலையில் வந்து அழைத்துச்செல்ல அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வெற்றி, சொக்கலிங்கத்தை தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

கைது

இதில் சொக்கலிங்கத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவம் குறித்து சொக்கலிங்கம் சிகிச்சையில் இருந்தபோது, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சொக்கலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தாக்குதல் வழக்கை தா.பழூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து முதியவரை தாக்கி கொலை செய்த பேத்தியின் கணவர் வெற்றியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்