ஆண்டிப்பட்டி பகுதியில் நோய் தாக்குதலால் கத்திரிக்காய் விளைச்சல் பாதிப்பு

ஆண்டிப்பட்டி பகுதியில் நோய் தாக்குதலால் கத்திரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-07-21 21:00 GMT

ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சிலுக்குவார்பட்டி, மூனாண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, தெப்பம்பட்டி, கொத்தபட்டி, ராஜதானி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் தங்களது தோட்டங்களில் கத்தரிக்காய் சாகுபடி செய்திருந்தனர். தப்போது கத்திரிக்காய் செடிகள் வளர்ந்து, காய்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளன.

இந்தநிலையில் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிட்ட கத்தரிக்காய்களில் வேர்ப்புழு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கத்திரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் தாக்குதலால் செடிகளில் காய்க்கும் கத்தரிக்காய்களில் சொத்தை எனப்படும் புழு தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பறிக்கப்பட்ட கத்தரிக்காய்களை தரம் பிரித்து சந்தைக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். அவ்வாறு தரம் பிரிக்கும் போது 3-ல் ஒருபங்கு கத்தரிக்காய்கள் புழு தாக்கி வீணாகி வருகிறது. தற்போது சந்தையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.45 முதல் ரூ.50 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் செடிகளில் வேர்ப்புழு தாக்குதல் அதிகம் உள்ளது என்று விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

எனவே ஆண்டிப்பட்டி பகுதியில் கத்திரிக்காய் செடிகளில் வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்